Saturday, May 25, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை-6:: ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது  (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ராவணன் ஸீதையை கடத்தி செல்லும் பொழுது வழியில் ஜடாயு என்கிற பறவைகளின் அரசன் ஸீதையை காப்பாற்றும் நோக்கில் ராவணனுடன் கடுமையான யுத்தம் புரிந்து ராவணனுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தது.
இறுதியில் ஜடாயு ராவணனால் கடுமையாக தாக்கப்பட்டு இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்து, ராமரிடம் விபரம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தது, ராமர் வந்தவுடன் அவரிடம் ஸீதை ராவணனால் கடத்தப்பட்டு வான்மார்க்கமாக சென்ற திசை போன்ற தகவலை சொல்லிவிட்டு உயிர்நீத்தது.
ராமர், தனது தம்பி லஷ்மணனிடம் ‘பறவைகளின் அரசனாகிய ஜடாயு எனக்காக ராவணனுடன் போரிட்டு உயிர் நீத்திருக்கிறது. மனித இனத்தில் மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளிலும் கூட உயர்ந்த குணங்களை கொண்ட ஜீவன்கள்இருக்கின்றன என்பதை ஜடாயு நிரூபித்திருக்கிறது. ஸீதையின் பிரிவினால் இருக்கும் துன்பத்தை விட எனக்காக உயிர் நீத்த இந்த பறவையின் மறைவு எனக்கு பெரும் துயரத்தை தருகிறது. நமது தந்தை தசரத மன்னரை போலவே மதிக்க தகுந்தது ஜடாயு. 

லஷ்மணா, ஜடாயுவின் இறுதி சடங்குகளை முறையாக செய்து முடிப்போம் என்று கூறிவிட்டு ஜடாயுவை பார்த்து ‘பறவைகளின் அரசனே, நீ நல்லுலகம் செல்வாயாக யாகங்களை நடத்துபவர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக, யுத்த களத்திலிருந்து பின் வாங்காமல் போரிட்டு, உயிர் நீக்கும் வீரர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக” என்று ராமர் சொன்னார்.

பின்னர் ஜடாயுவின் இறுதி சடங்குகளை லஷ்மணனுடன் ஸ்ரீ ராமர் செய்து முடித்தார். ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது. 

No comments:

Post a Comment